search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் அறிவிப்பு"

    சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். #ChhattisgarhCM

    ராய்ப்பூர்:

    பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

    ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    “சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GajaCyclone #EdappadiPalaniswami
    நாகை:

    நாகையில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் நாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகையில் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.



    அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #EdappadiPalaniswami


    திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி காவிரி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் பிரியும் பகுதியில் உள்ள 9 ‌ஷட்டர் மதகுகள் உடைந்துள்ளது. அதனை தற்காலிகமாக சீரமைப்பதற்காக துரிதமாக, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.

    கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணை உடையவில்லை சட்டர் பழுதானது. அது சரி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை பொறுத்தவரை அதிகமான கழிவு நீர் டேமிற்குள் வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் சட்டர்களில் பழுது ஏற்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



    1836-ல் கட்டப்பட்ட பழமையான கதவணை கிட்டத்தட்ட 182 ஆண்டுகள் முன் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. கடந்த 1924, 1977, 2005 மற்றும் 2013-ல் வெள்ளம் வந்த போது, இந்த கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது 5, 6 நாட்கள் தான் மேலணை வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    ஆனால் தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் அதிக அளவிலான நீர் வெளியேறியது. அதற்கு பிறகு 2-ம் கட்டமாக 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன் அழுத்தத்தினால் தற்போது இந்த அணை உடைந்துள்ளது.

    ஆண்டுதோறும் அணைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றது தான் இந்த உடைப்பு. இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான பொறியியல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும்.

    இந்த அணை ரூ.325 கோடியிலும், தெற்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்கால் அணை ரூ.85 கோடியிலும் சேர்த்து மொத்தம் ரூ.410 கோடியில் இரண்டு புதிய கதவணைகள் கட்டப்படும்.

    இந்த பணிகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என பொறியியல் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதற்கான பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் தொடங்கப்படும்.

    இதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கதவணை எந்த விதத்தில் கட்டப்படும் என்று நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

    காவிரி கொள்ளிடத்தை விட இரண்டு அடி தாழ்வாக உள்ளது. இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஒன்றரை மீட்டர் தடுப்பு ஏற்படுத்துகிறார்கள். மணல் மூட்டையை வைத்து தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேட்டூருக்கு வரும் தண்ணீரானது 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் மதகுகள் உடைந்ததற்கு மணல் குவாரிகள் காரணம் அல்ல. மணல் குவாரிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு தொலைவில்தான் மணல் குவாரிகள் இருக்கிறது. வரைமுறைக்கு உட்பட்டுதான் மணல் அள்ளப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிகளிலும் இப்படித்தான் மணல் அள்ளப்பட்டுள்ளது. அ.தி. மு.க. ஆட்சியில் மட்டும் தான் அள்ளப்படுகிறது என்பது தவறான கருத்து.

    இந்த மணல் அள்ளுவது படிப்படியாக குறைக்கப்படும். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. மணலின் செயல்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் பயன்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முக்கொம்பில் பலமிழந்த நிலையில் மேலும் பல மதகுகள் உடையும் அபாயம் இருந்ததால் முக்கொம்பு சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் சுமார் 50 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #HajPilgrims #HajSubsidy
    சென்னை:

    சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.



    அப்போது, இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    மேலும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.10 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்றும், சிறுபான்மை பெண்கள் கல்லூரி விடுதிகளில் 5 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். #TNAssembly #HajPilgrims #HajSubsidy
    தமிழகத்தில் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EPS #SolarPumpSets
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்
    நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.



    தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EPS #SolarPumpSets 
    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். #CM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள குறுவை சாகுபடி செய்யும் பகுதிகளில், பிரதானமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்தே குறுவை நெல் சாகுபடி அமைகிறது.

    வழக்கமாக, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கு ஜுன் 12-ந் தேதி அன்று பாசனத்திற்காக அணை திறக்கப்படும். அவ்வாறு ஜுன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டால், மேற்கண்ட பகுதிகளில் 3.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

    கடந்த 6 ஆண்டுகளாக, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜுன் 12-ந்தேதியன்று அணையினை பாசனத்திற்கு திறக்க இயலவில்லை. எனினும், டெல்டா வேளாண் பெருமக்களின் நலனையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரினைக் கொண்டு குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில், 2012-ம் ஆண்டு 12 மணி நேர முன்முனை மின்சாரமும், 2013-ம் ஆண்டிலிருந்து குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, செயல்படுத்தி வந்தார்.

    அம்மாவின் பெருமுயற்சியினாலும், வேளாண் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவினாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2.07 லட்சம் ஏக்கரிலிருந்து அதிகபட்சமாக 3.16 லட்சம் ஏக்கர் வரையிலும், குறுவை நெல் சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டது.


    அதன் விளைவாக, 2012ஆம் ஆண்டில் 2.3 லட்சம் மெட்ரிக் டன்னும், 2013ஆம் ஆண்டில் 3.4 லட்சம் மெட்ரிக் டன்னும், 2014ஆம் ஆண்டில் 4.3 லட்சம் மெட்ரிக் டன்னும், 2015ஆம் ஆண்டில் 4.9 லட்சம் மெட்ரிக் டன்னும், 2016ஆம் ஆண்டில் 5 லட்சம் மெட்ரிக் டன்னும் அரிசி உற்பத்தி செய்து வேளாண் பெருமக்களால் சாதனை நிகழ்த்தப்பட்டது.

    சென்ற ஆண்டு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரினை விடுவிக்காததால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை நெல் சாகுபடி செய்ய போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால், அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, சென்ற ஆண்டில் குறுவை சாகுபடி செய்யும் நெல் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

    அம்மாவின் அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடியதன் விளைவாக, மத்திய அரசு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து 1.6.2018 அன்று அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை காவிரி நீர் மேலாண்மை ஆணைய உறுப்பினராகவும், நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரை காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினராகவும் நியமனம் செய்து, 1.6.2018 அன்று மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. கேரள அரசு தன்னுடைய பிரதிநிதியை 6.6.2018 அன்று நியமனம் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. புதுச்சேரியும் தனது பிரதிநிதியை பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது. கர்நாடகா மட்டும் அதன் உறுப்பினர்களை நியமனம் செய்து இன்று வரை மத்திய அரசுக்கு பரிந்துரையை அளிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்ற குறுவை நெல் சாகுபடியை குறித்த நேரத்தில் துவக்கிட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உடனே அமைத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை 6.6.2018 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து, எனது 5.6.2018 நாளிட்ட கடிதத்தை அளித்தனர்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள குழுமத்தின் தலைவர் மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிற மாநிலங்கள் அவற்றின் உறுப்பினர்களை நியமிக்காமல் இருந்தாலும் கூட, இந்த ஆணையத்தின் கூட்டம் விரைவில் கூட்டப் படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டம் நடைபெற்று டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்கும் வரை, அம்மாவின் அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

    இவ்வாறான அம்மா அரசின் நடவடிக்கைகள் மூலமாக விரைவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் கிடைக்கும் என நம்புகிறேன்.

    தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக மட்டுமே உள்ளது. வினாடிக்கு 2,190கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருக்கின்றது. இதைக் கொண்டு, குறுவை நெல் சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜுன் 12-ந்தேதியன்று அணையினை திறந்து விட இயலாத சூழ்நிலை உள்ளது.

    கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினைக் கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

    எனவே, தண்ணீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி, நடப்பாண்டில் குறுகிய கால நெல் மற்றும் பயறு வகைப் பயிரையும் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #KuruvaiCultivation #MetturDamOpen #CM
    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #TNCM
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னத்தம்பியின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். மாவட்ட அளவில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று மலைப் பிரதேசங்களில் உள்ள தேவைகளை கண்டறிந்து மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சேலம் மாவட்டம் சங்ககிரி, எளம்பிள்ளை சித்தர் மேல்மலை கோவிலுக்குச் செல்ல மலை மீது புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் கொல்லிமலை பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.



    இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர். #TNAssembly #TNCM

    ×